கொழும்பு,ஏப் 28
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் வியாழக்கிழமை மக்கள், தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி ஆர்ப்பாட்த்தில் ஈடுப்பட்டனர்.
கடந்த 20 நாட்களாக காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
இந்த நிலையில், இளைஞர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், பொருளாதார நெருக்கடியை சுட்டிக்காட்டியும் வியாழக்கிழமை அனைத்து மக்களும் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதன்படி,
கொழும்பிலும் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார துறையினர் மற்றும் ஏனைய தொழிற்சங்கத்தினர் ஒன்றினைந்து இந்த ஆரப்பாட்டத்திதை சுகாதார அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியிலான பாரிய வேலை நிறுத்தம் எனும் தொழிற்சங்க நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இவ்வாறு ஒரு நாள் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளன.
பொது சேவைகள், மின்சாரம், சுகாதாரம், குடிநீர், துறைமுகம், கல்வி, தபால், தோட்டத் தொழிலாளர் உட்பட அனைத்து துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றன.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மலையகத்தில் தொடர்ந்தும் வலுப்பெற்று வருகின்றது.
இதன்படி, ஹட்டன் நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் யாழ்ப்பாண நகரில் இன்றைய தினம் பொதுமக்களின் அன்றாட செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு புகையிரத சேவை தபால் சேவைகள் என்பன முற்றாக செயலிழந்துள்ளன.
மேலும் யாழ்ப்பாண நகரில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.









