ராஜபக்ச அரசிற்கு எதிராக கொதித்தெழுந்த இளைஞர், யுவதிகள்!

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்தை உடனடியாக இராஜினாமா செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன . அதன்படி,

பத்தனையில் தோட்ட தொழிலாளர்கள், இளைஞர், யுவதிகள் பாரிய போராட்டம்

கொட்டகலை பத்தனை சந்தியில் இன்று (28) அரசுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று தோட்ட தொழிளாலர்கள், இளைஞர், யுவதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது

பத்தனை கிறேக்கிலி, மவுண்ட்வேர்ணன், இராணியப்பு, பொரஸ்கிறிக் ஆகிய தோட்டங்களை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், பத்தனை முச்சக்கரவண்டி சாரதிகள், வாகன சாரதிகள், நகர வர்த்தகர்கள் என சுமார் 500ற்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

மேற்படி தோட்டங்களிலிருந்து தொழிலாளர்கள் பேரணியாக பத்தனை சந்தி வரை வந்து அங்கு அனைவரும் ஒன்றுக்கூடி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இன்றைய பணிபுறக்கணிப்புக்கு ஆதரவு தெரிவித்தும், தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், தொடர் மின் துண்டிப்பு, எரிபொருள் விலையேற்றம், டீசல் தட்டுப்பாட்டினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்செயலைக் கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

எதிர்ப்பு பதாதைகளை காட்சிப்படுத்தியவாறு, கறுப்பு கொடிகளை ஏந்திக்கொண்டு கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

சுகாதாரத்துறை தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் ஆர்ப்பாட்டம்.

அரசாங்கதத்திற்கு எதிராக சுகாதாரதுறை சார்ந்த தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அரசாங்கத்தில் இருந்து வெளியேறு, பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், எரிபொருளின் விலையேற்றத்தை குறை போன்ற பதாதைகளை ஏந்தியிருந்ததோடு அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இத் தொழிற்சங்கங்களின் ஆர்ப்பாட்டத்தில் வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள், சிற்றூளியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், பத்தனை திம்புள்ள பகுதியில் இன்று (28.04.2022) மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன.

திம்புள்ள பகுதியிலும் தோட்ட தொழிலாளர்கள் வீதியில் அமர்ந்து போராட்டம்

தலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியை வழிமறித்த போராட்டக்காரர்கள் வீதிகளில் அமர்ந்தும், கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வீதியை வழிமறித்ததன் காரணமாக நாவலப்பிட்டி, கெட்டபுலா, குயின்ஸ்பெரி, இராவணகொடை போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.

கெட்டபுலா கொலபத்தனை, தலபத்தனை, கொங்காளை, குயின்ஸ்பெரி, கெலிவத்தை, போகவத்தை, திம்புள்ள போன்ற பகுதிகளில் உள்ள மக்கள், இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இப்போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது போராட்டகாரர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கறுப்பு பட்டிகளையும் தலையில் அணிந்திருந்தனர்.

அத்தோடு, வீதியில் அமர்ந்தவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Leave a Reply