வடக்கு போராட்டத்தை காட்டி தென்னிலங்கை மக்களின் எதிர்ப்பை மழுங்கடிக்க கூடாது! மனோ எம்பி கோரிக்கை

இறுதி போர் காலத்தில் வடக்கை நோக்கி நிகழ்த்தப்பட்ட உணவு, மருந்து, மின்சாரம், வாழ்வாதார தடைகள் பற்றியும், அவற்றை அம்மக்கள் எதிர்நோக்கி வென்றது பற்றியும் இப்போது கூறி, ராஜபக்சர்களுக்கு எதிரான இன்றைய தென்னிலங்கை  போராட்டத்தை  மழுங்கடிக்க கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது முகநூலில் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவரது முகநூல் பதிவில்,

‘இறுதிபோரை பற்றி பேசினால், ஆயுத போராட்டம் பற்றி, புலிகள் பற்றி பேச வேண்டி வரும். இதுகளை பற்றி பேசி போராட்ட களத்தில் எழுந்து வரும்  தமிழ்-சிங்கள உறவை பழுதாக்க கூடாது’ என்று, “வெளிநாடு சென்று திரும்பிய  பொருளாதார புலி தமிழர்” ஒருவர் சற்று முன் கூறினார். 

அதாவது, அமைதியாக ராஜபக்சர்களை முதலில் வெளியேற்ற  வேண்டுமாம். மற்றதெல்லாம் அப்புறம் பார்த்து கொள்ளலாமாம்.

“என்னடா இது, மதுரைக்கு வந்த ரோதனை” என்று இந்த கொழும்பு தமிழ் எம்பிக்கு தோன்றியது. 

இன்றைய தென்னிலங்கை போராட்டத்துக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்க வேண்டும். நாம்  வழங்குகிறோம்.  இன்றுகூட மாபெரும் வேலைநிறுத்தம். 

ஆனால் அதற்காக நமது மக்கள் பட்ட துன்பத்தை பற்றி ஞாபகப்படுத்தக்கூட கூடாதா? 

“என்னடா இது”, என்றேன். மேலும் அப்படி என்ன ஆழமான உறவு அதற்குள் ஏற்பட்டு விட்டது? இவர்களில் பெரும்பாலோர்தான் ராஜபக்சர்களுக்கு வாக்களித்தார்கள். ஆகவே போராடி இவர்கள் திருந்தி வரட்டும்.  

மேலும், நமது பிரச்சினைகளை பற்றி பேசாமல் இன்னமும் எவ்வளவு காலம் காத்திருப்பது? 

தமிழர்களில் ஒரு பிரிவினர் வெறும் உணர்ச்சி அலையில் அள்ளப்பட்டு போய் கொண்டிருப்பது தெரிகிறது. 

அதாவது, 2016ம் வருட சுதந்திர நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடக்கேட்டு திரு. சம்பந்தன் ஆனந்த கண்ணீர் விட்டதை போல் இருக்கிறது. என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply