
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையின் பின்னணியில் நாட்டின் கையிருப்பில் உள்ள டொலர் பற்றாக்குறையும் காரணமாக அமைகின்ற நிலையில் தற்போதைய டொலர் நிலையில் அரசினால் டொலரின் பெறுமதிக்கு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை என ரெலோ இளைஞர் அணித் தலைவரும் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான சபா.குகதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கைத்தீவின் பொருளாதார வீழ்ச்சி ஏற்றுமதி வருமானங்களையும் ஏனைய அந்நியச் செலாவணி வருமானங்களையும் இழந்து மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ள போது டொலரின் பெறுமதி அதிகரித்ததுடன் ரூபாய் மிகப் பெறும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் உள்நாட்டில் பொருட்களின் விலைகள் டொலரின் பெறுமதியை தாண்டி பன் மடங்கு அதிகமான விலைகளுக்கு விற்கப்படுகின்றது. உதாரணமாக டொலர் 200/= ரூபாவாக இருக்கும் போது 1000/= ரூபா விலையில் இருந்த சீமெந்துப் பை ஒன்று டொலர் 350/= ரூபாவாக இருக்கும் தற்போது 2850/= ரூபாவிற்கு விற்பனையாகிறது சாதாரணமாக டொலரின் பெறுமதியில் கணித்தால் 1750/= ரூபாதான் பெறுமதி ஆகவே மேலதிகமாக பெறப்படும் 1100/= ரூபாவை யார் பெற்றுக் கொள்கின்றார்கள்?
இதுதான் இங்குள்ள பிரதான கேள்வி! டொலரின் பெறுமதிக்கு மேலதிகமாக நிர்ணயிக்கப்படும் விலையின் வருமானம் யாரைச் சென்றடைகிறது ஒன்று நாட்டின் திறைசேரிக்கா?அல்லது தனி நபருக்கா? அல்லது குறிக்கப்பட்ட குழுவினருக்கா? இதற்கான பதிலை அரசாங்கம் கூறவேண்டும்!
டொலரின் பெறுமதி அதிகரிப்பே பொருட்களின் விலை ஏற்றத்திற்கு காரணம் என கூறும் ஆட்சியாளர்கள் ஏன் டொலரின் பெறுமதியை மீறி பன்மடங்கு அதிகமாக சகல பொருட்களும் விற்பனை செய்யப்படுவதை கட்டுப்படுத்தாமல் இருக்கின்றனர் இதன் உள் நோக்கம் என்ன?
டொலரின் பெறுமதிக்கு ஏற்ப பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்ய முடியவில்லை என்றால் நாட்டின் சகல நிதிக் கட்டமைப்புக்களும் செயல் இழந்து சீர்குலைந்து விட்டதாகவே கருத வேண்டும் அதாவது நாட்டின் நிதி அமைச்சு தனது இயலுமையை இழந்து விட்டது என்பது உண்மையா? இல்லை தனி நபர்களின் கைகளுக்கு பெரும் தொகைப் வருமானங்கள் செல்கின்றனவா? என தெரிவித்தார்.





