4 பொலிஸ் அதிகாரிகளின் கைது தொடர்பில் நீதிமன்றில் இன்று சிஐடி அறிக்கை!

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டை நடத்த உத்தரவிட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பீ. கீர்த்திரத்ன மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றில் அறிக்கையிடவுள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற அறிக்கையின் பின்னர், கிடைக்கப் பெறும் உத்தரவுக்கமைய, கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களை விளக்கமறியலில் வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரம்புக்கனையில் துப்பாக்கிக் சூட்டை நடத்துமாறு உத்தரவிட்ட சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும்படி கேகாலை நீதவான் அண்மையில் உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவை உடனடியாக அமுல்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பீ கீர்த்திரத்ன நேற்றிரவு நாரஹேன்பிட்டி காவல்துறை மருத்துவமனையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஏனைய 3 பொலிஸ் கான்ஸ்டபிள்களும் நேற்றிரவு குண்டசாலை பொலிஸ் வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *