மக்களின் வரிப்பணங்களை திருடி, அரசாங்கம் குபேரர்களாக நாட்டினை நாசமாக்கி நடுவீதியில் விட்டிருக்கிறார்கள். எனவே இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களும் ஒன்றிணைந்து நல்லதொரு ஆட்சியினை அமைக்க ஒன்று திரள வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் ஜே.வி.பியின் மே தின கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகர்,
69 இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து ஆட்சிப்பீடம் ஏற்றிய கோத்தபாய ராஜபக்ஷ அரசினால், இன்று மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகி இருக்கிறார்கள். இதன் காரணமாக ஜனாதிபதியை தென்னிலங்கை மக்கள் வீட்டிற்கு போ என்று சொல்லியும் ஆட்சியினை விட்டு நீங்காமல் இருக்கிறார்.
ஜனாதிபதி ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்கு முன்னர், விவசாயிகளின் பிரச்சனைகள், இளைஞர்களின் பிரச்சனைகளைத் தீர்த்தல் மற்றும் லஞ்சம், ஊழல் பிரச்சனைகள் தீர்த்தல், வேலையில்லா பிரச்சனைகள் என்பவற்றை தீர்ப்பதாகவும் கூறி இருந்தும், அதனை நிறைவேற்ற முடியாத நபராக, மக்களை மீண்டும் மீண்டும் வதைக்கின்ற அரக்கனாக மாறியுள்ளார்.
இவர்களுக்கு பின்னால் சென்ற மக்கள் அனைவரும் அவர்களுக்கு எதிராக மாறியுள்ளனர்.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் தமிழ் விடுதலை முன்னணியானது, இலங்கையில் யாழ்ப்பாணம், கொழும்பு, அனுராதபுரம், மாத்தறை போன்ற 4 இடங்களில் மே தினங்களை நடத்துகிறது.
இலங்கையில் போதைப்பொருள் பாவனையிலும், வறுமையிலும் வடமாகாணம் முன்னிலை வகிக்கின்றது.
இவ்வாறாக போதைப்பொருள் பாவனை அதிகரித்தால் கொள்ளை, திருட்டு, வன்முறைகள் அதிகரித்த சமுதாயமாக மாறும், கல்வியில் பின் தங்கியோர் மற்றும் வறுமைக்கோட்டுக்குள் உள்ள மக்களே இதற்கு அடிமையாகி இருக்கிறார்கள். இது தொடர்ந்தால் சீரழிந்த யாழ்ப்பாணமாக மாற்றமடையும்.
மக்களை வதைக்கின்ற இந்த கோத்தபாய அரக்கனின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக மூவின மக்களும் எதிர்வரும் 6 ஆம் திகதி அணி திரண்டு கோத்தபாயவை வெளியேற்றுவது மட்டுமன்றி, அடுத்த கட்ட நடவடிக்கையையும் சிந்திப்போம்.
மக்களின் வரிப்பணங்களை திருடி இன்று அரசாங்கம் குபேரர்களாக நாட்டினை நாசமாக்கி நடு வீதியில் விட்டிருக்கிறார்கள். எனவே இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களும் ஒன்றிணைந்து நல்லதொரு ஆட்சியினை அமைக்க ஒன்று திரள வேண்டும்.- என்றார்

