யாழில் வீதி ஒன்றுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! – மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் – அராலிப் பகுதியில் சீரமைப்புக்காக தோண்டப்பட்ட வீதியின் ஒரு பக்கம், இன்று வரையில் சீரமைக்கப்படாமையால் சாரதிகள் மற்றும் அந்த வழியால் பயணம் செய்வோர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

நீண்டகாலமாக சீரமைக்கப்படாமல் காணப்பட்ட யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதான வீதி அண்மையில் காப்பெட் வீதியாக சீரமைக்கப்பட்டது. இதனுடன் தொடர்புடையதாக காணப்படும் அராலி பகுதிக்குச் செல்லும் பிரதான வீதியும், அகலிப்புக்காக ஒரு பக்கம் உடைக்கப்பட்டது.

அதாவது வீதியின் ஒரு பக்கம் ஆழமாக தோண்டி எடுக்கப்பட்டது. இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட வீதி இன்று வரை அகலிப்பு செய்யப்படவும் இல்லை, சீரமைக்கப்படவும் இல்லையென மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். வீதி தோண்டப்பட்டு சுமார் ஒருவருடமாகிறது.

தற்போது ஒரு வீதியில் ஒரு பக்கம் இல்லாமல் ஒடுக்கப்பட்ட வீதியாகவும், மண் தோட்டப்பட்ட இடம் பள்ளமாகவும் காணப்படுகிறது. இதனால் குறித்த வீதியால் வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தவிர பல விபத்துகள் இடம்பெற்று எலும்பு முறிவு கூட ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்னர்.

இந்த நிலையில் வீதி உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும், அத்துடன் தோண்டப்பட்ட எங்கே என்ற விபரமும் தெரியப்படுத்தப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply