ஐ.பி.எல்.: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி!

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 47ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மும்பையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சஞ்சு சம்சன் 54 ஓட்டங்களையும் சிம்ரொன் ஹெட்மியர் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில், டிம் சவுத்தீ 2 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ், அன்குல் றோய் மற்றும் சிவம் மாவி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 153 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, நிதிஷ் ரணா ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும் ரின்ங்கு சிங் ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட், பிரசீத் கிருஸ்ணா மற்றும் குல்தீப் சென் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 23 பந்துகளில் 1 சிக்ஸர் 6 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ரின்ங்கு சிங் தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *