அம்பாறை- உமரியில் காடழித்து நில ஆக்கிரம்பு நடவடிக்கை: பொதுமக்கள் கண்டனம்

அம்பாறை- உமரி கிராமம் பகுதியிலுள்ள கல்பாறைகளான மலைகளிலுள்ள காடுகளின் மரங்களை வெட்டி தீயிட்டு, காடழிப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உமரி கிராமத்தில் இருக்கும் இந்த கல் பாறைகளுடனான காட்டுபகுதி, அரச காணிகள் ஆகும்.

களப்பு மற்றும் வட்டிகுளம் பகுதியை அண்மித்த பகுதிகளிலுள்ள கிராமங்களிலுள்ள இந்த காடுகளின் மரங்களை சிலர் வெட்டி, அதனை தீயிட்டு அழித்து நிலங்களை ஆக்கிரமிக்கும் நடவடிக்கையினை சில வாரங்களாக மேற்கொண்டு வருகின்றனர் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, உமரி கடற்கரை பகுதியிலுள்ள சிலர் தமது சொந்த காணிகளை தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்துவிட்டு, தற்போது தாங்கள் குடிமனைகளை கட்டி சேனைப்பயிர் செய்கை செய்ய போவதாக, இதுவரை சுமார் 10 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கல்பாறையுடைய காட்டில் எவ்வாறு பயிர் செய்யமுடியும் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் பயிர் செய்ய போகின்றோம் என்ற பெயரில் சிலர் இந்த நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகவே  இந்த காடழிப்புக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஆகவே இதன் பாதிப்பினை உணர்ந்து உடனடியாக இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் முன்வர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *