சீனா இலங்கையில் இரண்டு பில்லியன் டொலர்களுக்கும் அதிக பெறுமதியான முதலீடுகளை விரைவில் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி பாலித ஹோகன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இரண்டு தரப்பிலும் தற்போது பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. விரைவில் இந்த வேலைத்திட்டங்கள் செயல்வடிவம் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு துறைமுக நகரில் 530 மில்லியன் டொலர் பெறுமதியான முதலீட்டுத் திட்டம், அம்பாந்தோட்டையில் சீனோபார்ம் தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலை, பாதுகாப்புக் கண்ணாடித் தொழிற்சாலை போன்றவற்றை நிறுவுவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது.
மேலும் இலங்கையிலுள்ள பாடசாலைகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் என்ற டிஜிற்றல் வகுப்பறைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கும் சீனா முதலீடு செய்யவுள்ளது.
அதேபோன்று நவீன தொழில்நுட்ப விவசாயப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கும் கொழும்பு -நாரஹேன்பிட்டியில் தொடர் மாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கும் சீனா முதலீடு செய்யவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் விரைவில் சீனா மேற்கொள்ளவுள்ள முதலீடுகள் தொடர்பாக பீஜிங்கில் இருந்தவாறு கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


