மன்னாரில் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணி வழங்க நடவடிக்கை!

மன்னார்-மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக் குளம் பகுதியில்  கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணியை வழங்கிய பின்னரே  ஏனைய விடை யத்தை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் உரிய அதிகாரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) பணிப்புரை விடுத்தார்.

மன்னார்  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை சோழ மண்டலக் குளம் பகுதியில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணி 250  ஏக்கர் காணப்படுகின்றது.

இக்காணியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இலுப்பைக்கடவை அந்தோனியார் புரம் பகுதியில் உள்ள 95 பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் அவர்களுக்கு குறித்த காணி உரிய முறையில் வழங்கப்படாமை குறித்து மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் அண்மையில் காணி அமைச்சரிடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரி அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.

இந்த நிலையில் குறித்த கோரிக்கைக்கு அமைவாக   இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் தலைமையில் வட மாகாண காணி சீர் திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர்  நிமலன், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் கே.அரவிந்தராஜ் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உற்பட உரிய அதிகாரிகள் இலுப்பைக்கடவை சோழ மண்டலக்குளம் பகுதியில் உள்ள குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டதோடு விசாரனைகளை மேற்கொண்டனர்.

இதன் போது அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணத்தை பெற்றுக் கொண்டவர்கள் , தனி நபர்கள் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் குறித்த பகுதியில் காணி துப்பரவு   செய்திருந்த நிலையில் அவர்களின்  துப்புரவு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் கடந்த 25 ஆண்டுகளாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு முதலில் காணியை வழங்கிய பின்னரே  ஏனைய விடையத்தை முன்னெடுக்க வேண்டும் என மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான்  உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *