
கோத்தாவின் உரை சுயநலத்தின் உரை செல்வம் எம்.பி தெரிவிப்பு!
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரை, பெறுமதிமிக்க எங்களது உயிர்களை துச்சமாக மதித்துள்ள சுயநல உரை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுகொள்ளவதற்கான யுக்தியாகவே கோத்தாபயவின் ஐ.நா உரையைப் பார்கின்றேன். இலங்கையில் வாழும் அனைத்து இனமும் சமம் என்று அவர் தெரிவித்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்து அடிக்கடி ஒரு விடயத்தை அவர் குறிப்பிட்டு வருகின்றார். தான் சிங்கள மக்களின் வாக்குகளாலேயே வெற்றிபெற்றேன் என்றார். அத்துடன் தமிழர் பிரதேசங்களில் முன்னெடுக்கப்படும் அடக்குமுறைகள், இராணுவப் பிரசன்னம், உயிரிழந்தவர்களை நினைவுகூரக் கூட முடியாத இக்கட்டான நிலையில் இன்று தமிழர்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
எனவே இனங்கள் அனைத்தும் சமன் என்று தெரிவிப்பதை ஏற்கமுடியாது. அது உண்மைக்கு புறம்பானது. காணாமல் போனவர்களுக்கு இறப்புப் பத்திரம் வழங்கமுடியும் எனத் தெரிவித்ததன் மூலம் அவர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார். காணாமல் போனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஏற்றுள்ளார். அப்படியானால் படுகொலை செய்தவர்களுக்கு என்ன தீர்ப்பு?. அவர்களுக்கான நீதி என்ன?. கொலை செய்தவர்களைத் தண்டித்த பின்னரே பத்திரம் வழங்கமுடியும்.
அவர் இராணுவத்தை காப்பாற்றும் நிலைப்பாட்டினையே கொண்டுள்ளார். எனவே அந்தக்கூற்று எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக உள்ளது. இன்று விடுதலைப் புலிகள் தொடர்பான புகைப்படங்களை வைத்திருந்தால்க்கூட கைதுசெய்வதற்கான நிலைமை பயங்கரவாத தடைச்சட்டத்தினூடாக உருவாக்கப்பட்டுள்ளது. அது மோசமாக எமது இளைஞர்களை வஞ்சித்துக்கொண்டிருக்கின்றது. எனவே அவரது உள்ளக பொறிமுறை என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது – என்றார்.

