கிளிநொச்சி – அரசர் கேணி பகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரத்தை சிதைத்த விசமிகள் விரைவில் கண்டறியப்படுவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த குடும்பத்தைச் சார்ந்த சிலர் ஏற்கனவே, வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாகவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள அரசர் கேணி பகுதியில் மாற்றுத்திறனாளி குடும்பம் ஒன்றால் தங்களது வாழ்வாதார தொழிலாக பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் அனைத்தும் விசமிகளால் பிடுங்கி எறியப்பட்டுள்ளன.
விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டு வரும் குறித்த குடும்பம் இம்முறை 800 மிளகாய் செடிகளை பயிரிட்டுள்ளனர். விவசாய உள்ளீடுகள் பற்றாக்குறை, விலைவாசிகளின் ஏற்றம் என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் கடன் பெற்றும் தங்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
அக்குடும்பத்தினரை இன்று நேரில் சென்று சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் சிலரே இந்த நாசவேலையை செய்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தொடர்ச்சியாக இடம்பெற்றும் இவ்வாறான செயல்களைத் தடுக்க தாம் மேல் மட்டம் வரை சென்று தீர்வைப் பெற்று தருவதாக தெரிவித்திருந்தார்.





