
இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தையின் மட்டக்களப்பு விஜயம் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது கோபத்தை வெளிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், ஊடகம் ஒன்றின் பெயரைச் சொல்லி குறித்த ஊடகம் உண்மைக்கு புறம்பான வகையில் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறினார்.
அத்துடன் அங்கு அவரிடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரனை, நீங்கள்தான் இந்த பொய்யான செய்திகளை அனுப்புவது என்றும் நீங்கள் எந்த ஊடகத்திற்கு செய்தி அனுப்புகிறீர்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தி ஒன்று ஊடகங்களில் வெளியானால் அல்லது உண்மைக்கு புறம்பான வகையில் செய்தி ஒன்றை குறித்த ஊடகம் பிரசுரித்திருந்தால் அதற்கான முழு பொறுப்புமே அந்த செய்தியை வெளியிட்ட நிறுவனத்தையே சாரும்.
இவ்வாறான நிலையில் ஊடக சந்திப்புக்கு சென்ற ஊடகவியலாளரிடம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், குறித்த செய்தி தொடர்பாக கேள்வி எழுப்பியமை ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது என்பதோடு சுயாதீன ஊடகவியலாளர்களின் ஊடக செயற்பாட்டை தடுப்பதாக உள்ளது என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு பிராந்திய ஊடகவியலாளர்களை பொறுப்பு கூற சொல்லுவது அல்லது ஊடகவியலாளர்களை குற்றம் சுமத்துவது ஊடக சுதந்திரத்திற்கு எதிரானது ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.




