இலங்கை மீதான மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சர்வதேச பொறிமுறைக்கமைய விசாரணை செய்வதற்கும், இலங்கை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பல்வேறு நாடுகள் தடுப்பூசியைப் பெற பணம் இல்லாமல் திண்டாடுகின்ற நிலையில், இலங்கை மீது விசாரணை நடத்த பாரிய நிதியை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஒதுக்கீடு செய்வது எந்த விதத்தில் நியாயம் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இலங்கை மீதான மனித உரிமை மீறல் பிரச்சினைகளை உள்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் எமது நாட்டு கலாசாரத்திற்கமைய யதார்த்த தீர்வுகளைப் பெறுவதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம்.
அந்தக் கடமைகள் எந்த சந்தர்ப்பத்திலும் வெளிநாடுகளுக்கு கையளிக்க நாம் ஒருபோதும் இணங்கமாட்டோம்.
வெளிநாட்டுப் பொறிமுறை என்பது எமது நாட்டின் அரசமைப்பிற்கு முரணானது என்பதுடன், எமது நாட்டின் அரசியல் கட்டமைப்பிற்கும் எதிரானதாகும்.
அதேபோல, ஐ.நாவின் சட்டம், சம்பிரதாயங்களுக்கமைய, சிறியதோ பெரியதோ என்ற வித்தியாசமின்றி அனைத்து நாடுகளையும் சமமாகப் பார்க்க வேண்டும்.
ஆகவே, இலங்கையை விசேட இலக்காக நிர்ணயிக்கப்பட்டு எமது நாட்டிற்கு மாத்திரம் வரையறுக்கப்படுகின்ற பொறிமுறையை உருவாக்கி, சாட்சியங்களைத் திரட்டி, அடிப்படை ஒன்றை உருவாக்குவதற்கும் சர்வதேச நீதிமன்றத்தின் முன்பாக சிறிலங்காவை கொண்டுசெல்வதே சர்வதேச பொறிமுறையின் நோக்கம். எனினும், எமது நாட்டிற்கு எதிரான சாட்சிகள் அனைத்தும் முறையற்றே சேகரிக்கப்படுகின்றன.
இந்தச் சாட்சியங்களை யார் வழங்குகின்றார்கள்? அவர்களது அடையாளம் என்ன? உண்மையிலேயே தகவல்களை அளிக்கின்றார்களா? குறுக்குக் கேள்வி கேட்பதற்கும் உரிமையில்லை என்பதால் இயற்கைக்கு விரோதமான இந்த செயற்பாடுகளை ஏற்கமாட்டோம். இந்த உலகில் மிகப்பெரிய பிரச்சினைகள் இலங்கை காரணமாகவே ஏற்படுகின்றன என்பதை தெரிவிக்க முடியுமா?
வேறு நாடுகளில் பிரச்சினைகள் உள்ள நிலையில் எமது நாட்டின் மீது திருப்பப்படுகின்ற பார்வையில் எந்த அடிப்படை காரணமும் இல்லை. எமது நாட்டை சிக்கவைப்பதற்கு அமைக்கப்படுகின்ற பொறிமுறையை செயற்படுத்த மிகப்பெரிய பணம் ஒதுக்கவும் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
உலகில் பாதிபேருக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற ஒரு டோஸ்கூட வழங்க முடியாதிருக்கின்ற நிலையில், அதற்கு பாரிய நிதிகள் தேவைப்படுகின்ற நிலையில், இலங்கையை குறிவைத்து மிகப்பெரிய தொகையை ஒதுக்கப்படுவது எந்த விதத்திலும் நியாயமல்ல” என தெரிவித்தார்.





