
தவறணைகளைத் திறப்பதற்கு அனுமதி!
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கள்ளுத் தவறணைகளும் நேற்று முதல் செயற்பட ஆரம்பித்துள்ளன என்றும், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் கிரிஷாந்த பத்திராஜ் தெரிவித்தார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன. ஆயினும் கடந்தவாரம் மது விற்பனை நிலையங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆயினும் பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கிளைகளைத் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக தென்மராட்சி பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணித் தலைவரும், பனை அபிவிருத்திச் சபையின் உறுப்பினருமான க.துரைசிங்கம், பனை அபிவிருத்திச் சபையின் தலைவருடன் இதுதொடர்பில் கலந்துரையாடினார்.
கிளைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அதில் சுட்டிக்காட்டப்பட்டது. சபையின் தலைவர், உரிய அமைச்சருடன் இது தொடர்பாகக் கலந்துரையாடி தவறணைகளைத் திறப்பதற்கு அனுமதி பெற்றுக் கொடுத்ததை அடுத்து, நேற்றுமுதல் தவறணைகள் இயங்க ஆரம்பித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.




