நாட்டில் இடம்பெற்ற வன்முறைகளில் 4 பேர் உயிரிழப்பு! 200 பேர் காயம்

நாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு அருகில் துப்பாக்கி பிரயோக சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வீரகெட்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்த நபர்கள், மேலதிக சிகிச்சைகளுக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், வீரகெட்டிய பிரதேச சபை தலைவரின் வீட்டுக்கு தீ வைக்க முயற்சித்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, நிட்டம்புவையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது செயலாளர் ஆகியொர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்ததுடன், அவர்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருவரின் நிலை கவலைக்கிடமாகக் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையில் காயமடைந்த 200 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Leave a Reply