தொழிற்சங்க போராட்டத்தை நிறுத்தும் மருத்துவர்கள் – சிகிச்சை பெற அரச வைத்தியசாலைகளுக்கு வருமாறு அரசியல்வாதிகளுக்கு அழைப்பு!

தமது தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை மருத்துவ நிபுணர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் நிலையற்ற சூழல் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்திற்கொண்ட பின்னரே சங்கம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

திங்கட்கிழமை அமைதியான போராட்டக்காரர்கள் மீது அரசாங்க அனுசரணையுடன் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நேற்று தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

இதேவேளை, அனைத்து அரசியல்வாதிகளும் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதன் மூலம் அரசியல்வாதிகளுக்கும் மருத்துவர்களுக்கும் இடையில் தேவையற்ற மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும்.

அத்துடன், அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் சுமைகளை அரசியல்வாதிகள் புரிந்து கொள்வதற்கும் இது உதவும் என்று மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இதற்கிடையில் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் ஆகியோருக்கு மருத்துவ நிபுணர்கள் சங்க அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

தற்போதைய வன்முறைச் சூழல் தொடர்ந்தால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இது ஏற்கனவே ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையை மோசமாக்கும் என்றும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்குமாறு சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் கலாநிதி பிரசாத் கொலம்பகே பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையிலும் காலி முகத்திடலில் நிராயுதபாணிகளான பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தமது சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply