கொழும்பு பிரதான வீதிகளில் உலாவரும் இராணுவ வாகனங்கள்! மக்கள் அச்சம்

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பு மாவட்டத்தின் பிரதான வீதிகளில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

கவச வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றில் இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காலப்பகுதியில் பொது வீதிகளில், புகையிரத கடவைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்கள் மற்றும் கடலோரங்களில் ஒன்று கூடுவதற்கோ அல்லது உலாவுவதற்கோ முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும்தரப்பினரை வெளியேறிச் செல்லுமாறு ஜனாதிபதி செயலகத்துக்குள் இருந்து பொலிஸார் ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்துள்ளனர்.

கடந்த 6ஆம் திகதி முதல் அவசரகாலச்சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் நாளை காலை 7.00 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனவே கொழும்பு காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் தரப்பினரை வெளியேறிச் செல்லுமாறு பொலிஸார் அறிவித்து வருகின்றனர்.

Leave a Reply