கோத்தாவும் வீட்டிற்குச் செல்ல வேண்டும்-மாக்சிச லெனினிச கட்சி மீண்டும் வலியுறுத்து!

கோத்தாவும் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையின் ஆளும் வர்க்க சக்திகள் ஏகாதிபத்திய பிராந்திய மேலாதிக்க சக்திகளோடு இணைந்து நின்று அவர்களின் வழிகாட்டலில் நாட்டிற்கும் மக்களுக்கும் தேசிய இனங்களுக்கும் எதிரான தமது வலிமையைக் காட்டி வருவதையே ரணில் விக்கிரமசிங்காவிற்கு வழங்கப்பட்ட பிரதமர் பதவி எடுத்துக்காட்டி நிற்கிறது.

கடந்த தேர்தலில் வெற்றிபெறமுடியாது தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்ற ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் ஆளும் வர்க்க ஆதிக்க அரசியல் குடும்ப வழி வந்தவராவார்.

அவரது மாமனாரான ஜே.ஆரே இன்று வரையான இலங்கையின் அனைத்து நாசங்களுக்கும் காரணமாக அமைந்த 1978 ன் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சி முறைக்கான அரசியலமைப்பைக் கொண்டு வந்து நிலை நிறுத்தியவராவார்.

இதே ரணில் விக்கிரமசிங்காவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கையின் ஆட்சி அதிகாரத்திற்குப் புதியவர்கள் அல்லர். மாறிமாறி அதிகாரத்திலிருந்து நாட்டின் அரசியல் பொருளாதாரத் தளங்களை நாசப்படுத்தி வந்தவர்கள்.

அதன் தொடர்ச்சியைத் தான் ராஜபக்ச குடும்பம் தொடர்ந்து முன்னெடுத்து இன்றுவரை அதிகாரத்தில் இருந்து வருகிறது என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்.எனவே ரணில் பிரதமர் பதவி பெறுவதன் மூலம் எதையும் சாதிக்கப் போவதில்லை.

ஜனாதிபதி கோதாபாயவும் பிரதமர் பதவி பெற்ற ரணிலும் இணைந்து நின்று அமெரிக்க, மேற்குலக ஏகாதிபத்திய மற்றும் இந்தியப் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் நலன்களைத் தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்வர். அதற்கான ஆசீர்வாதங்களும் வாழ்த்துகளும் ரணிலுக்குக் கிடைத்துள்ளன.

அத்துடன் தனது பிரதமர் பதவி மூலம் ராஜபக்ச குடும்பத்தையும் அவர்களது அதிகார துர்ப்பிரயோகங்கள் மற்றும் பாரிய ஊழல்களையும் ரணில் விக்கிரமசிங்க தாராளமாகப் பாதுகாத்தும் கொள்வார் என்பதில் ஐயம் இருக்கமுடியாது.

எனவே இலங்கையின் ஆளும் வர்க்கப் பிற்போக்கு சக்திகள் கைகோர்த்துள்ள இன்றைய சூழலில் உழைக்கும் மக்கள் உள்ளிட்ட இளைஞர் – மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.

கோத்தா வீட்டுக்குச் செல்ல வேண்டும். புதிய அரசியலமைப்பு வரைவதற்கான அரசியலமைப்புச் சபை தோற்றுவிக்கப்பட வேண்டும். அச் சபையில் உழைக்கும் மக்கள் பிரதிநிதிகள், நாட்டையும் மக்களையும் நேசிக்கும் நேர்மையான கல்வியாளர்கள் -புத்திஜீவிகள், மக்கள் சார்பு சட்ட ஆலோசகர்கள், தேசிய இனங்களின் நேர்மையான பிரதிநிதிகள், மதசார்பின்மையை வலியுறுத்தும் மதப் பிரமுகர்கள் போன்றோரைக் கொண்ட அரசியலமைப்புச் சபையானது நாட்டின் இறைமை, சுதந்திரம், சுயாதிபத்தியம் என்பனவற்றை கையிழக்காது நாட்டின் வளங்களைப் பாதுகாக்கும் வகையிலும் அரசியலமைப்பு வரையப்பட வேண்டும்.

இதன் மூலமே தேசிய பொருளாதாரத்திற்கான திட்டங்களை வரைய முடியும். அத்துடன் ஆளும் வர்க்கங்களுக்கும் அந்நிய சக்திகளுக்கும் வாய்ப்பாக அமைந்த தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். இவற்றை உள்டக்கிய குறைந்த பட்ச வேலைத் திட்டத்தை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படுவதையே எமது கட்சி வலியுறுத்துகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply