செய்தி வெளியிடுகின்றமைக்காக ஊடகவியலாளர்கள், விசாரணைக்கு அழைக்கப்படுகின்றமை தொடர்பில் தான் கவலை அடைவதாக ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதன்போது உள்ளி மோசடி தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர்,
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்களை விசாரணைகளுக்காக அழைக்க வேண்டாம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், ஊடகவியலாளர்களை விசாரணைக்கு அழைக்கப் போவதில்லை என அமைச்சர் சரத் வீரசேகர உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, செய்தி வெளியிடுகின்றமைக்காக ஊடகவியலாளர்கள், விசாரணைக்கு அழைக்கப்படுகின்றமை தொடர்பில் நான் கவலை அடைகின்றேன் எனவும் அமைச்சர் டளஸ் தெரிவித்துள்ளார்.


