ஊடகவியலாளர்களை அச்சறுத்தி அரசியல் நடத்த முடியாது; மட்டக்களப்பு மாவட்ட ஏற்பாட்டாளர்

மட்டக்களப்பு மக்களை மடையர்கள் என்று நினைக்கின்றார்கள் பொதுஜன பெரமுன குழுவினர் என்றும், ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அரசியல் நடத்த முடியாது என்பதை இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட ஏற்பாட்டாளர் என்.சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியது ஒரு பாரிய குற்றமாகும்.

சிறைக் கைதிகள் ஜனநாயக முறைப்படி நீதிமன்றத்தின் கட்டளைக்கு உட்பட்டு தான் அங்கிருக்கின்றார்கள்.

எனவே, இது ஒரு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். அரசு இதைப்பற்றி விசாரிப்பதற்குக் குழு அமைத்திருக்கின்றது. இதற்கு குழு அமைக்க வேண்டிய அவசியமில்லை. இது நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய விடயம். இது நீதிமன்றத்தால் தான் விசாரிக்கப்பட வேண்டும்.

நீதி அமைச்சர் இவ்விடயத்திற்கு மன்னிப்புக் கேட்கின்றார். இதில் மன்னிப்புக் கேட்க வேண்டிதில்லை. இது மன்னிப்புக் கேட்கும் விடயமும் அல்ல, மன்னிக்கும் விடயமும் அல்ல, மறக்கும் விடயமும் அல்ல. இது ஒரு பாரிய குற்றச் செயலாகும்.

அதைவிட, ஒரு பெரிய மடத்தனமான வேலை மட்டக்களப்பில் நடந்திருக்கின்றது. பொதுஜன பெரமுன மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவரை அனுப்பியிருக்கின்றது. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோர் இவரை வரவேற்றிருக்கின்றார்கள்.

அவர்கள் இவரை அனுப்ப வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும். இவரது வரலாறு தெரியாதவர்களா இவர்கள்.

இது தொடர்பில், கேள்வியெழுப்பிய ஊடகவியலாளருக்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்.

இவ்வாறு, அச்சுறுத்தி அரசியல் நடத்த முடியாது என்பதை அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், உங்களை இந்த இடத்தில் வைத்தவர்கள் மக்கள். மக்களையோ, ஊடகவியலாளர்களையோ அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை.

மட்டக்களப்பு மக்களை மடையர்கள் என்று நினைக்கின்றார்கள் இந்தப் பொதுஜன பெரமுன குழுவினர். இது மிகவும் வேதனையளிக்கக் கூடிய காரியம். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply