
தாளையடி நயினாதீவில் குடிதண்ணீர்த் திட்டத்தை ஆரம்பிக்கிறார் பிரதமர்!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் மூன்று லட்சம் மக்களுக்கு (60 ஆயிரம் குடும்பங்களுக்கு) ஒரு நாளைக்கு 24,000m3 சுத்தமான குடிதண்ணீரைப் பெற்றுக் கொடுக்கும் இரண்டு பெரும் நீர்த்திட்டங்களின் மெய்நிகர் அங்குரார்ப்பண நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தாளையடியில் நிர்மாணிக்கப்படும் எஸ்.டபிள்யு.ஆர்.ஓ. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் நயினாதீவில் முழுமையாக நிறைவுசெய்யப்பட்ட தண்ணீர் விநியோகத் திட்டம் ஆகியனவே அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன. இந்தத்திட்டத்தின் மூலம் தற்போது 5 ஆயிரம் பயனாளர்களுக்கு சுத்தமான தண்ணீர் வழங்கப்படுகிறது.
ஒரு லட்சம் மக்களை உள்ளடக்கிய வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் 284 கிலோமீற்றர் தூரத்துக்கு குழாய்களை அமைக்கும் திட்டம் உள்ளடக்கிய யாழ். நகர விநியோகத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும். யாழ்.நகர விநியோகம் மற்றும் தாளையடி எஸ்.டபிள்யு.ஆர்.ஓ. திட்டங்கள் 2023ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்படவுள்ளன. இதனூடாக மூன்று லட்சம் பயனாளர்களுக்கு சுத்தமான குடிதண்ணீர் பெற்றுக் கொடுக்கப்படும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.

