ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்டத் தூதுக்குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றியுள்ளனர்.
கலந்துரையாடலின் பின் எம்.ஏ.சுமந்திரன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தமை,
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர், நாட்டின் தற்போதைய நிலைமை பற்றி கேட்டு அறிந்து கொண்டனர்.
மேலும், முக்கியமாக GSP வரிச்சலுகையை இல்லாமல் செய்வதற்கான ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைய, இலங்கையின் நிலை என்ன என்பதை அறிய வந்துள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவோம் என இலங்கை அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு வாக்கு கொடுத்ததன் காரணமாகத் தான் மீளக் கொடுக்கப்பட்டது.
எனினும், நான்கு வருடங்களாக அதனைச் செய்யாமல் இருப்பதாலேயே இவ் வரிச் சலுகை நீக்கப்படுகிறது எனவும், அடுத்த வருடத்தில் அது நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பயங்கரவாதச் சட்டம் மிக மோசமானது, ஈஸ்டர் தாக்குதலுக்கு பின் அதை பெருமளவில் உபயோகிக்கிறார்கள்.
மேலும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளிலே பங்கு கொண்டதாகவும், சமூக வலைத்தளத்தில் பதிவுகள் போட்டதற்காகவும் பலரை கைது செய்திருக்கிறார்கள்.
இந்தச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும். நீண்ட காலமாக இந்தச் சட்டத்தின் கீழ் உள்ளவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
மேலும், அனுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் தொடர்பிலும் கேட்டறிந்தார்கள்.
இலங்கையில் தற்போது வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் அரசின் செயற்பாடு தொடர்பிலும், இராணுவமய மாக்குதல் பற்றியும் பேசியுள்ளோம்.
மேலும், இப் பிரச்சினை அனத்துக்கும் காரணம் நாட்டிலே எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளும் அரசியலமைப்பு இல்லை என்றும், வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு அரச அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு சரியான முறையில் செய்யப்பட வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.


