வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி துரிதப்படுத்தப்படும் என்றும் 100,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி மிக விரைவில் 100 ரூபாய்க்கும் குறைவாக நுகர்வோர் அரிசியை வாங்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும்,
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அரிசி, பால் மா , கோதுமை மா, எரிவாயு, சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மற்றும் சந்தையில் அத்தகைய பொருட்களின் பற்றாக்குறை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது எனவும் இறுதியாக அந்த பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் சந்தையில் நியாயமான விலையில் அரிசியை வாங்க நுகர்வோருக்கு வாய்ப்பு இல்லை என்றாலும் , அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தைக்கு அரிசியை வெளியிடுவதை கட்டுப்படுத்தினாலும் இது தொடர்பாக அரசாங்கம் தலையிட வேண்டியிருக்கும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரிசியை இறக்குமதி செய்வது மற்றும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அந்த பொறுப்பை அரசாங்கம் உணர்ந்த பிறகு 100,000 மெட்ரிக் டென் அரிசியை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் அரிசி கொள்ளையர்கள் மற்றும் பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் நுகர்வோரை சுரண்டுவதற்கு இடம் கொடுத்துவிட்டு அரசாங்கம் அமைதியாக இருக்கப்போவதில்லை என அவர் தெரிவித்தார்.


