யுத்தம் முடிந்து 10 வருடம் ஆகிவிட்டது. யுத்தத்தின் போதும், 30, 40 வருடத்திற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றனர். அவர்களின் உறவினர்களின் நலனைக் கொண்டு அதற்காக உடனடித் தீர்வுக்காக இறப்புச் சான்றிதழ்களை வழங்குகின்றோம். இதனை உடனடி மருந்தாகத் தான் பார்க்கின்றேன். உடனடித் தேவை என்பது மருந்து அதன் பின்னர் தான் மருந்தின் பலன் கிடைக்கும் என யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா அமர்வின் போது கோட்டாபய ராஜபக்ஷ கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று உரையாற்றிய கருத்து தொடர்பில் ஊடகவியாளாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் உடனடித் தீர்வாகத் தான் அவதானிக்கப்படுகின்றது. அது நிரந்தமான தீர்வாக அமையாது என தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பாக சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். மாற்றுக் கருத்து உண்மையாகவும் இருக்கலாம்.
சிலருக்கு எந்ததொரு முடிவும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இது இறப்புச் சான்றிதழ் மூலம் கிடைக்குமாயின் அது குறைந்தபட்சம் உடனடி தேவையாக இருக்கும். அதற்கான உறுதி மொழியை அரசாங்கமே வழங்கும் அது நிலையான கொள்கை உடையது.
மேலும், பகுதி, பகுதியாகத் தான் தீர்வுகளை எட்ட முடியும். கிடைக்க முடியாத எந்ததொரு தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை. முதற்தடவை காணாமற்போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் கிடைக்கப்போகிறது எனவும் தெரிவித்துள்ளார்.


