நெல்லின் விலையை தீர்மானிப்பதற்கு, அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகாரம் இல்லையென விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் மாத்திரமே அதனை மேற்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை நேற்று முன்தினம்திங்கட்கிழமை தீர்மானித்திருந்த போதிலும், அதற்கு அமைவான வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எவ்வாறிருப்பினும், நேற்று செவ்வாய்க்கிழமை ஊடக சந்திப்பு ஒன்றை நடத்திய வர்த்தகர் டட்லி சிறிசேன, அரிசி ஆலை உரிமையாளர்கள், எதிர்காலத்தில் அரிசி மற்றும் நெல் விற்பனை செய்வதற்கான புதிய விலைகளை அறிவித்தார்.
மேலும் ஒரு கிலோகிராம் நாடு நெல்லை 62 ரூபா 50 சதத்திற்கும், ஒரு கிலோகிராம் சம்பா நெல்லை 70 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா நெல்லை 80 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக டட்லி சிறிசேன குறிப்பிட்டார்.
இதேநேரம், சந்தையில் ஒரு கிலோகிராம் நாடு அரிசியை 115 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 140 ரூபாவுக்கும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியை 165 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில், கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்றைய ஊடக சந்திப்பில், பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களில் ஒருவரான டட்லி சிறிசேன, நாட்டின் அரிசி விலையை தீர்மானித்தார்.அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லின் விலையை தீர்மானிக்க முடியாது.டட்லி சிறிசேனவுக்கு அதனை தீர்மானிக்க முடியாது.அரசாங்கமே அதனைத் தீர்மானிக்கும்.
மேலும் விவசாயிகளுக்கு உத்தரவாத விலையை வழங்குவது தொடர்பில் தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.
அமைச்சர் இவ்வாறு கூறினாலும், வர்த்தகர் டட்லி சிறிசேன நேற்று அறிவித்த விலைகளுக்கு அமையவே, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரிசி விற்பனை செய்யப்பட்டதாக சில வர்த்தகர்களும், பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.


