வடக்கு மாகாணத்தில் க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் எமக்கு உற்சாகம் அளிக்கிறது என தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் பீ. எஸ். எம் சாள்ஸ், கிராமப்புற பாடசாலைகளின் தேர்ச்சி மட்டம் உயர்வடைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்குமாகாணத்தின் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற திட்டத்தின் அடிப்படையில், வட மாகாணத்தில் கடந்த 2 வருடங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.
தற்போது நாட்டில் காணப்படுகின்ற கொரோனா தொற்று சூழ்நிலையிலும், க. பொ.த சாதாரண தர பரீட்சையில் முடிவுகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில், இணையவழி மூலம் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை ஆசிரிய, அதிபர்கள் வழங்கி ஊக்கமளித்து வெற்றிபெற வைத்துள்ளனர்.
அதன் அடிப்படையில், சராசரியாக 72 வீத பெறுபேற்றை நாம் அடைந்துள்ளோம். அதிலும் குறிப்பாக கிராமப்புற பாடசாலைகள் மூலமே இப் பெறுபேறு கிடைத்துள்ளது.
குறிப்பாக கிளிநொச்சி, வவுனியா, மன்னார் போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமப்புற பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் போன்ற படங்களில் மாணவர்கள் திறமைச் சித்தியை பெற்றுள்ளார்கள்.அந்த வகையில், 67.65 வீதமான சித்தியை கணித படத்திலும், 62 வீதமான சித்தியை விஞ்ஞான படத்திலும், 51 வீதமான சித்தியை ஆங்கில படத்திலும் பெற்றுள்ளனர்.
அத்துடன் 72 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்று உள்ளனர். எனினும் மாகாண ரீதியான பரீட்சை முடிவுகள் முழுமையாக கிடைக்க பெறாத நிலையிலும், மாணவர்களின் பெறுபேறுகள் எமக்கு உற்சாகம் அளித்துள்ளது.
மேலும்,வட மாகாணத்தின் கல்வி நிலைமட்டம் முன்னோக்கிச் செல்வதோடு மட்டுமல்லாமல், உள ஆற்றலையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென மேலும் தெரிவித்தார்.
விவசாய செய்கையில் கடந்த காலங்களில் நெற்ப் பயிர்ச் செய்கை மூலம் 100 வீதத்தை அடைந்திருக்கின்றோம். அதுபோல உளுந்து 90 வீதமும், மரக்கறி 95 வீதமும், கிழங்கு பயிர்ச் செய்கையை 50 வீதமும் அடைந்துள்ளோம்.
இதனை விட விவசாயிகள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை சேமிப்பதற்கு மிக முக்கிய தேவையை பூர்த்தி செய்ய, முல்லைத்தீவில் 1000 மெட்ரிக் தொன் சேமித்து வைக்கக்கூடிய ஒரு களஞ்சியசாலையை கட்டிக்கொண்டுள்ளோம்.
இதில் 20 வீதமான வேலைகள் முடிவடைந்துள்ளன. மேலும் வட மாகாணத்தில் 100 மில்லியன் பெறுமதியான 10 களஞ்சியசாலைகளை ஐந்து மாவட்டங்களில் அமைத்துக் கொண்டுள்ளோம். இது ஏறக்குறைய 870 மெட்ரிக் தொண் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடியதாக அமையும்.
வட மாகாணத்தின் விவசாய பணிப்பாளரின் அலுவலகத்தை தற்போது மாங்குளம் பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டு, அதற்கான வேலைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தம்முடைய வேலைகளை இலகுவாக்க கூடிய வகையில் திட்டங்களை வகுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் இதன் போது தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சேதளைப் பசளை என்ற திட்டத்திற்கு 500 மில்லியன் ரூபா கிடைத்துள்ளது.
அதனை வட மாகாணத்தில் உள்ள விவசாயிகள் பெற்றுக் கொள்வதற்குரிய திட்டங்கள் விவசாய திணைக்களத்தினால் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
அவை மூன்று மாத காலத்திற்குள் 100 வீதம் செயற்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான கட்டிட வசதிகள், உபரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டுள்ளோம்.
கால் நடைகளை பொறுத்த வரையில் 40 வீதமான ஆளணிகளை இந்த வருடத்தில் நிரப்பியுள்ளோம்.
பால் உற்பத்தி 60-65 வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்புகளை மேற்கொள்வதற்கு போதிய மேய்ச்சல் நிலம் இல்லை என்ற பாரிய பிரச்சனையை தீர்க்கும்
முகமாக, அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு அமைச்சர்களான மஹிந்தானந்த அழுத்தகமே, டக்ளஸ் தேவானந்தாவின் ஒத்துழைப்பால் 2900 ஏக்கர் பகுதி வனவிலங்குகள் பகுதியில் அவர்களின் சம்மதத்துடன் வட மாகாண பகுதி மேய்ச்சலுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது என மேலும் தெரிவித்தார்.
நீர்ப்பாசன திணைக்களத்தில் 84 திட்டங்கள் நடைமுறைப்படுத்தி இருக்கின்றோம். இத் திட்டங்களின் ஊடாக 14,535 மில்லியன் ரூபா வட மாகாணத்திலே நடைமுறை படுத்தப் பட்டுள்ளது.
வட மாகாணத்தில் மன்னாரில் கைவிடப்பட்ட கூறாய் நீர்பாசனத் திட்டத்திற்கு 150 மில்லியன் ஒதுக்கப்பட்டு புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது.
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் எனது முக்கிய நோக்கம். யுத்த காலத்திற்கு பிறகு மக்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என மேலும் தெரிவித்தார்.
கேள்வி- குற்றச்செயல்கள் அதிகரித்து காணப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
பதில்- இது சம்பந்தமாக மிக ஆழமாக அவதானித்துக் கொண்டுள்ளோம். அண்மையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எமக்கு மிகவும் கவலை அளிக்கின்றது. எனினும் இது சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு மக்களின் பூரண ஒத்துழைப்பும் அவசியம் என்றார்.


