
சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு முடிவு கட்டுக
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சம்பந்தனிடம் கோரிக்கை!
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தன்னிச்சையான செயற்பாடுகள் தொடர்பில் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். கூட்டமைப்பினதும், தமிழ் மக்களினதும் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் சுமந்திரனின் செயற்பாடுகள் அமைவதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தனர்.
கூட்டமைப்புக்குள்ளேயான அண்மைக்கால சர்ச்சைகள் தொடர்பில் கலந்துரையாடி கூட்டமைப்பை சிறந்த நிலையில் நகர்த்துவது பற்றிய கலந்துரையாடல் ஒன்று, இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
அதன்போதே பங்காளிக்கட்சித் தலைவர்களான மாவை சேனாதிராசா (தமிழரசுக்கட்சி) செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), சித்தார்த்தன் (புளொட்) ஆகியோர் சுமந்திரன் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.
இது தொடர்பில் ரெலோ சார்பில் கலந்து கொண்ட, நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்ததாவது;
“ கூட்டமைப்புக்குள் முரண்பாடு இருந்தாலும் கட்சி பிரியாது ஒற்றுமையுடன் செயற்படுவோம் என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கூறியபின்னரும்கூட, கூட்டமைப்பின் பேச்சாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தி ஊடக சந்திப்புகளை நடத்தும் சுமந்திரன், பங்காளிக் கட்சிகள் பிரிந்து செல்வதாக இருந்தால் செல்ல முடியும் என்று தரக்குறைவான கருத்துக்களை முன்வைக்கின்றார்.
அவர் அவ்வாறு கூறுவதிலிருந்து, பங்காளிக் கட்சிகளான நாங்கள் கூட்டமைப்பில் தொடர்ந்தும் நீடிப்பதா என்று யோசிக்கவைக்கிறது. சுமந்திரன் கூறுவதன்படி, நாம் பிரிந்துசென்றால் சம்பந்தன் வெறுமனே ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராகவும், மாவை சோ.சேனாதிராசா தமிழ் அரசுக் கட்சியின் தலைவராகவும் மட்டுமே இருப்பர். தவிர, கூட்டமைப்பு என்பதே இல்லாமல் போய்விடும்.
கூட்டமைப்பைவிட்டு எவராவது சென்றால் தோற்றுவிடுவர் என்ற நிலைமை எப்போதோ மாறிவிட்டது. அவ்வாறு விலகியவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இப்போது தெரிவுசெய்யப்படுகின்றனர்.
ஆனால் நாம் நீண்டகாலமாக அரசியல் கட்சிகளாக உள்ளோம். எமக்கென்று தனியாக வாக்கு வங்கிகளும் உள்ளன. எனவே வெளியே போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய பலம் எம்மிடம் உள்ளது. அவ்வாறு தனித்துச் செயற்பட ஆரம்பித்தால், கூட்டமைப்பு என்ற கட்சியை விடவும் ,தமிழர்களுக்குத்தான் பெரும் பாதிப்பாக அமைந்துவிடும். தமிழரின் ஒற்றுமையைச் சிதைக்கும்.
சுமந்திரன் போன்று, எடுத்த எடுப்பிலேயே நாங்கள் பிரிந்துசெல்லமாட்டோம். எனவே, சுமந்திரனின் செயற்பாடுகள் குறித்து, அவர் தன்னிச்சையாகக்கூறிவரும் கருத்துக்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டும்” என்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர் – என்று கருணாகரன் தெரிவித்தார்.
அதேவேளை, கூட்டமைப்பைப் பலப்படுத்தவும் ஒன்றிணைந்து செயற்படவும், கூட்டமைப்பின் இணைத்தலைவர்களாக பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் செயற்படுவது குறித்த ஆலோசனையும் இதன் போது முன்வைக்கப்பட்டது. இது பற்றி அரசியல்குழுக் கூட்டத்தில் ஆராய்ந்து சாதகமான பதில் வழங்குகின்றேன் என்று சம்பந்தன் உறுதியளித்தாரென்றும் தெரிவிக்கப்பட்டது.

