
வடக்கில் பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை! ஆசிரியர்களுக்கு விசேட பேருந்து!
வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ் சாள்ஸ் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகள் உள்ளன. அவற்றை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாகாணத்தில் வெளிமாவட்டங்களிலிருந்து பயணிக்கும் ஆசிரியர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சரிடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போக்குவரத்து அமைச்சருடன் பேசி அதற்கான அனுமதி கிடைத்துள்ளது.
இதன்மூலம் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையின் கீழ் தமது பயணத்தை மேற்கொள்ள முடியும்.
மேலும் ஆசிரியர்களுக்கு அவசர சுகாதார நடவடிக்கைகளை பயிற்சியளிக்க மாகாண சபையின் நிதியில் சுகாதாரத் திணைக்களத்தை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். மேலும் ஒட்சிமீற்றர் உள்ளிட்ட சுகாதார உபகரணங்களைப் பெற்று ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் வழங்க அதிகாரிகளுக்குப் பணித்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.

