
ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினர் நிரந்தர நியமனம் வழங்குமாறு
வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!
நிரந்தர நியமனம்கோரி ஒன்றிணைந்த பட்டதாரிகள் சங்கத்தினர் வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, காலத்தை வீணடிக்காதே, நிரந்தர நியமனத்தை உடன் வழங்கு, கதைத்தது காணும் உறுதி மொழியை நிறைவேற்று, 20 ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவுக்கு போதுமா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாகைகளை ஏந்தியவாறு, கோசங்களை எழுப்பியவாறும் பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
“பட்டதாரிகளுக்கு ஒருவருட பயிற்சிக்காலம் நிறைவடைந்தும் அரசு சரியான நியமனத்தை வழங்கவில்லை. செப்ரெம்பர் 03ஆம் திகதி ஒருவருட பயிற்சிக்காலம் முடிவடைந்த பின்னரும் எமக்கான நியமனம் வழங்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும். பட்டதாரி பயிலுநர்கள் சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகம் மற்றும் சமுர்த்தி போன்றவற்றுக்கு வாரத்தில் 07 நாள்களும் எதுவித மேலதிக கொடுப்பனவுகளுமின்றி அழைக்கப்படுகின்றனர். இது பெரும் குறைபாடாக இருக்கின்றது.
தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமையில் 20 ஆயிரம் ரூபாவைக் கொண்டு எவ்வாறு ஒரு குடும்பத்தை கொண்டு நடத்த முடியும்?.
இந்தநிலையில் தற்போதைய வேடிக்கையான அரசு, எங்களின் பயிற்சிக்காலத்தை 20 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் மேலும் 06 மாதங்களுக்கு நீடித்திருப்பதானது எங்களது வாழ்க்கையில் மேலும் கஸ்டத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கின்றது.
பல்வேறு போராடங்களின் ஊடாகக் கிடைக்கப்பெற்ற இந்த நியமனத்தை ஒரு வரப்பிரசாதமாக நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், இந்த அரசு எங்களை கஸ்டத்துக்குள்ளாக்கி போராட்டங்களை தொடருவதற்கு தள்ளியுள்ளது.எனவே இந்த அரசு கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப செப்ரெம்பர் 03 என்ற திகதியின் படி எங்களுக்கு நியமனம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.” என்று தெரிவித்தனர்.

