இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்த முழு சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளதாக பகிரங்க மேடைகளில் தெரிவிக்கும் அரசாங்கம், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை மறைமுகமாக விசாரணைக்கு அழைத்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகேட்டு கொழும்பில் போராட்டம் நடத்திய பலரை காவல்துறையினர் நாளைமறுதினம் விசாரணைக்கு அழைத்திருப்பதாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு கேட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கொழும்பில் பாரிய வாகனத் தொடரணி ஒன்றை முன்னெடுத்திருந்தோம். அதன்போது காவல்துறையினரால் 44 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அதன்பின், அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இந்த பேரணியில் தங்களது சொந்த வாகனங்களையே ஆசிரியர்களும் அதிபர்களும் பயன்படுத்தியிருக்கின்ற நிலையில், வாகனங்களின் உரிமையாளர்களுக்கு காவல்துறையினர் கொழும்பு கோட்டையிலுள்ள நிலையத்தால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயகவிரோத செயற்பாடாகும்.
ஆர்ப்பாட்டம் செய்ய முழு சுதந்திரமும் இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறிவருகிறது. மறுபக்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது விசாரணை என்ற பெயரில் குறுக்குவழியில் அடக்குமுறையை கையாள முயற்சிக்கின்றார்.
இந்தச் செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மனித உரிமை அமைப்புக்கள் என பலரிடமும் கேட்டுள்ளோம். அதேபோல, அடுத்தமாதம் 15 ஆம் திகதி தென்மாகாண பாடசாலைகளை திறப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும் அதற்கு முன்னர் ஆசிரியர்கள், அதிபரிகளின் சம்பளப் பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை அறிவிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.


