யாழிற்கு திருட்டுத் தனமாக வருகை தரும் பாகிஸ்தான் தூதுவர்: காரணம் என்ன? பின்னணியில் உள்ள கட்சியினரை அம்பலப்படுத்திய விந்தன் கனகரட்ணம்

பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி திருட்டுத் தனமாக வந்துசெல்வதாக தகவலொன்று கிடைத்துள்ளது. தீவகத்தை நோக்கி அவர்களுடைய பயணம் காணப்படுவது எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜெனிவாவில் இடம்பெற்று முடிந்த ஐ.நா. சபையின் 76 வது கூட்டத் தொடரில், இலங்கை நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழர் அமைப்புகளுடன் பேசிச்சுவார்த்தை நடத்துவதாக கூறினார்.

ஆனால், அமேரிக்கா, பிரித்தானிய, கனடா போன்ற புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ் அமைப்புகள் இலங்கையில் தடை விதிக்கப்பட்டு கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

அதே அமைப்புகள் பயங்கரவாத்திற்கு துணைபோவதாக முத்திரை குத்தப்பட்டு தடையில் உள்ள போது, அவ் அமைப்புகளுடன் பேச போகின்றோம் என்று சொல்லப்பட்ட செய்தி, இந்த அரசாங்கத்தை நகைபுரியதாக பார்த்து சிரிக்கத் தோன்றுகிறது.

முதலில் இலங்கையில் புலம்பெயர் தேசத்து அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். அத்துடன், அரசாங்கத்திற்கு ஊதுகுழலாக இருந்து செயற்படுகின்ற பல அமைப்புகளும் வெளிநாடுகளில் உள்ளது. அத்தகைய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்கு தமிழ் மக்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை பிரநித்துவப்படுத்துகின்ற கட்சிகள் இருக்கின்றனர். அந்த கட்சிகளோடு இனப் பிரச்சனையை பேசி தீர்க்க முற்படாமல் புலம்பெயர் தேசத்தினருக்கு அழைப்பு விடுப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டு பேச்சுவார்த்தை நடக்க முற்பட்டால், புலம்பெயர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அவர்களை தடைப் பட்டியலில் இருந்து முதலில் நீக்க வேண்டும்.

அவ்வாறின்றி வெறுமனமே, ஐ.நா. சபையை ஏமாற்றுவதற்கும் காலத்தைக் கடத்துவதற்கும் இழுத்தடிப்பதற்குமாக வெளிநாட்டிலே ஒரு பேச்சு, இலங்கையிலே இன்னொரு பேச்சு என இரட்டை வேடம் போடும் இந்த அரசியலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.

எனவே, தமிழர்களது தரப்பு நிச்சியமாக இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது.

காணாமல் போனோர் விடயத்தில் நாம் சர்வதேச விசாரணையை தான் நாம் எதிர்பார்த்துக் கொண்டுளோம்.

ஆனால் உள்நாட்டு விசாரணை என்ற போர்வையில் அதற்காக வழங்கப்பட்ட நிதியில் ஒருவரைக் கூட கண்டுபிடித்து காட்ட முடியவில்லை.

இதற்கு உடனடியாக சர்வதேச நீதிப் பொறிமுறை தேவை. சர்வதேச நாடுகளின் தலையீட்டால் தான் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக் கொடுக்க முடியும் என்றார்.

அத்துடன், பாகிஸ்தான் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி திருட்டுத் தனமாக வந்து போவதாக தகவலொன்று கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தீவகத்தை நோக்கி அவர்கள் ஏன் பயணித்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்ற கேள்வி எமக்குள் காணப்படுகிறது.

பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிரான அச்சுறுத்தலான நாடு. அதுமட்டுமல்ல எமக்கும் எதிராக இந்த அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பு கொடுத்த நாடு. நம் மண்ணையும் மக்களையும் அழித்த பங்காளி நாடுகளில் ஒன்றாக காணப்படுகிறது.

அவ்வாறான பாகிஸ்தான் நாடு வடக்கில், அதுவும் தழிழர் தாயக பகுதியில் ஊடுருவி திருட்டுத் தனமாக செயற்படுவதற்கு பின்னால் ஈபிடிபி என்ற கட்சி தான் ஆதரவாக உள்ளனர்.

ஏற்கனவே நெடுந்தீவு, அணலைத் தீவு, எழுவைத் தீவு போன்ற தீவகத்தின் பல பகுதிகளை சீனாவிற்கு இந்த அரசாங்கம் தாரைவார்த்துவிட்ட சூழ்நிலையிலேயே, பாகிஸ்தான் நாட்டவரின் ஊடுருவல் தமிழ் மக்களுக்கு பாரிய அச்சுறுத்தலையும் பாதிப்பையும் கொண்டு வரும் என்பதில் ஐயமில்லை.

இதனை நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம் எதிர்க்கின்றோம். எங்களை மீறி எதாவது முதலீடுகளோ, பாதுகாப்பு தொடர்பிலான ஏற்பாடுகளோ இந்த அரசாங்கம் செய்யுமானால் அதற்கும் இவர்கள் துணைபோவார்கள் என்றால் நாங்கள் வீதியில் இறங்கி போராடி தடுத்து நிறுத்தவும் தயார் என்றார்.

Leave a Reply