
(எம்.ஏ.றமீஸ்,ஹூனைப் எம்.ஹானிபா)
கொவிற் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த பயணத் தடை இன்று(01) அதிகாலை தளர்த்தப்பட்ட வேளையில், அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி தமது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதற்கமைவாக, அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளில் மும்மூரமாக ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது. நீண்ட காலமாக மூடப்பட்டுக் காணப்பட்ட பல வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டன. இவ்வாறு திறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களில் மக்கள் சுகதார நடைமுறைகளைப் பின்பற்றி பொருட் கொள்வனவில் ஈடுபட்டனர்.
பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினரின் மிகுந்த கண்காணிப்புக்கு மத்தியில் மக்கள் பொது இடங்களுக்கும், வர்த்தக நிலையங்களுக்கும் சென்று தத்தமது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து வாகனங்கள் சேவையில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது. குறைந்த பயணிகளே பொதுப் போக்வரத்து வாகனங்களில் பயணங்களை மேற்கொண்டனர்.
இதேவேளை பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் நிலைமைகளைத் தவிர்க்கும் வகையில் கேந்திர நிலையங்களில் சுகாதாரத் துறையினரும், பாதுகாப்புப் படையினரும் சேவையில் ஈடுபட்டனர்.
நோய்த் தொற்று ஏற்படாத வண்ணம் வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் கூடி நிற்பது தவிர்க்கப்பட்டு போதுமான இடைவெளிகளில் மக்கள் நிறுத்தப்பட்டு வர்த்தக நிலையங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
வர்த்தக நிலையங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், பேருந்து தரிப்பு நிலையங்கள் போன்றவற்றில் மக்கள் கூட்டம் சற்று அதிகளவில் காணப்பட்ட போதிலும், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் போன்றவற்றில் சுகாதார அறிவுறுத்தல்கள் காட்சிப்படுத்தப்பட்டு மக்கள் அதனைப் பின்பற்றி செயற்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

