ஒக்டோபர் ஒன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம். பலரும் இந்த தினத்தை சந்தோஷமாக கொண்டாடும் போது இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கிட்டத்தட்ட இருபதாயிரம் குடும்பங்களிலுள்ள முதியவர்களும் சிறுவர்களும் கண்ணீருடன் தமது உறவுகளின் வருகைக்காக காத்திருக்கும் அவல நிலை தான் தமிழர் தாயகத்தில் தொடர்கிறது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
தாய் தந்தையரை காணாது அநாதைகள் என்ற வேதனையுடன் குடும்ப வாழ்விற்கு உதவியும் பாதுகாப்பும் இல்லாது வறுமையில் வாடும் சிறுவர்களுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் வருவார்கள் என்ற மன ஆதங்கத்துடன் இறுதிக்காலத்தில் அலைந்து திரியும் முதியவர்களின் எதிர்பார்ப்பிற்கும் மரணச் சான்றிதழ் வழங்கும் ஜனாதிபதியின் வாக்குறுதி வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
உறவுகள் வருவார்களா! அதற்கான பொறுப்புக் கூறல் கிடைக்குமா! நீதி கிடைக்குமா! பரிகார நீதி கிடைக்குமா என பல ஆண்டுகளாக காத்திருந்து இரண்டாயிரம் நாட்களை அண்மித்து வீதிகளில் போராடிவரும் சிறுவர்களுக்கும் முதியவர்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய தரப்பு ஒற்றைச் சொல்லில் சாதாரண சாவுக்கு மரணச் சான்றிதழ் வழங்குவது போல பதில் அளிப்பது ஏற்றுக் கொள்ள முடியாத மனிதவுரிமை மீறல்.
மேலும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு பொறுப்புக் கூறலுடன் பரிகார நீதி வழங்குவதே நியாயமான நீதி.இதனை பாதிக்கப்பட்ட தரப்புக்கு பெற்றுக் கொடுக்க ஓரணியில் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


