வெருகல் பிரதேச செயலக ஏற்பாட்டில் கச்சான் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் கச்சான் விதைகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெருகல் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.எச். கணி தலைமையில், திருகோணமலை மக்கள் சேவை மன்றமும் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனமும் இணைந்து இச் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.
அரசாங்கத்தின் சௌபாக்கியா தேசிய வேலைத்திட்டத்தை மேலும் பலப்படுத்த, 30 விவசாயிகளுக்கு அரை ஏக்கர் காணியில் கச்சான் செய்கையை மேற்கொள்வதற்கான கச்சான் விதைகள் மற்றும் சேதனைப் பசளைகள் அடக்கிய தொகுதிகளை மலேசியா தமிழர் பேரவையின் நிதி அனுசரணையில் வழங்கப்பட்டது.
கொரோனாத் தொற்றால்; பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு உதவி தன்னிறைவான உணவுத் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு இது போன்ற உதவிகள் நன்மையளிக்கும் வகையில் வன்னி ஹோப் நிறுவனத்தினூடாக திருகோணமலை மக்கள் சேவை மன்றம் பல முன்னெடுப்புகள் அமுல்படுத்தி வருகின்றது.
இந் நிகழ்வில், மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம். ரீ. எம். பாரிஸ், அதன் உத்தியோகத்தர்களான கே. தவசீலன், ஆர் கணேஷமூர்த்தி, எம். வசீம், வெருகல் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.




