கல்முனை வடக்கு பற்றி பேச வியாழேந்திரனுக்கு அருகதை இல்லை!

கல்முனை வடக்கு பற்றி பேச
வியாழேந்திரனுக்கு
அருகதை இல்லை
 அரச அதிகாரத்தை வைத்து தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றவே முற்படுகிறார்

* தமிழர்கள் தொடர்பில்  முடிவெடுக்கும் அதிகாரம்  ஹரிஸுக்கு கிடையாது

– கலையரசன் எம். பி காட்டம்

ஹரிஸ் எம். பி உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பு ஒரு பிரச்சினையும் இல்லை என்று சொல்கின்ற பட்சத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை ஒரு இரவுக்குள் தரம் உயர்த்தி தர முடியும் என்று
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்து இருப்பது, எமது மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற செயலே ஆகும் என்று, தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை கலையரசன் எம். பியை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மேலும் தெரிவித்ததாவது;
வியாழேந்திரன் கடந்த தேர்தல் காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல இடங்களுக்கும் வந்து மேடை பேச்சுக்களை மேற்கொண்டார்.
  ராஜபக்ஷ அரசாங்கத்தில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நிச்சயம் தரம் உயர்த்தி தரப்படும் என்று முழங்கினார்.
ஆனால்,  அவர் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக வந்த பிற்பாடு, ஒரு நாள்கூட இன்னமும் அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தரவே இல்லை. அம்பாறை மாவட்டத்தில் உள்ள எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக எந்த அக்கறையையும்  உண்மையில் வெளிப்படுத்தி இருக்கவில்லை.
எனவே, இவருக்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பாக பேசுவதற்கு உண்மையில் எந்த அருகதையும் கிடையாது. அது மட்டும் அல்லாமல் அவரின் கருத்து தொடர்ந்தும் எமது மக்களை ஏமாற்றுகின்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே காட்டுகின்றது.
 கல்முனை தமிழர்கள் தொடர்பில் முடிவெடுக்கும் எந்த ஓர் அதிகாரமும் ஹரிஸுக்கு இல்லவே இல்லை.
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தி தரப்படுவதற்கு ஹரிஸ் எம். பி உட்பட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்புதான் தடையாக தொடர்ந்தும் இருந்து வருகின்றது.
 இப்படி இருக்க, ஹரிஸும், மு. காவும் பிரச்சினை இல்லை என்று சொல்கின்ற பட்சத்தில் ஒரு இரவுக்குள் தரம் உயர்த்தி தர முடியும் என்று வியாழேந்திரன் சொல்லி இருப்பது கேலி கூத்தும், பசப்பு வார்த்தையுமே ஆகும்.
 கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கான தீர்வு, ஹரிஸ் எம். பி உள்ளிட்ட மு. கா தரப்பினரிடம்தான் உள்ளது என்றால் கடந்த காலங்களில் இவரும், அரசாங்கமும் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் போலியானவை என்பதுடன் இவ்விடயத்தில் இவர், அரசாங்கம் ஆகியோரின் இயலாமையும் வெளிப்பட்டு நிற்கின்றது.
   மட்டக்களப்பு மாவட்டம், வெகுவிரைவில் வறிய மாவட்டமாக மாற கூடிய அபாயம் கண் முன் தெரிகின்றது. வரட்சியான மாவட்டமாக அது விரைவில் மாறும் என்று கவலைப்பட வேண்டி உள்ளது. ஏனென்றால்,  தமிழர்களின் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.மணல் கொள்ளைகள் அங்கு பரவலாக இடம்பெற்ற வண்ணம் உள்ளன. அங்கு உள்ள மக்களின் அன்றாட, அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை.
  அரசாங்கம் மூலமாக தமிழ் மக்களுக்கு தீர்வுகளை பெற்று கொடுப்பார் என்று காட்டி கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியவர் வியாழேந்திரன். ஆனால், அவரால் எந்தவொரு சிறிய தீர்வைக்கூட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கேனும் பெற்று கொடுக்க முடியாமல் உள்ளது என்பதே உண்மை நிலை ஆகும்.
  குறுகிய சுய இலாப அரசியலையே வியாழேந்திரன் மேற்கொண்டு வருகின்றார். தேர்தல் மேடை பேச்சு போன்ற ஒன்றையே இப்போதும் நடத்தி இருக்கின்றார். தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி பெற்று தருவதற்கு இதய சுத்தியுடன் தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நாம் காட்டி கொடுப்பவர்களோ கூட்டி கொடுப்பவர்களோ அல்லர்.

Leave a Reply