வன்னிமாவட்ட பொதுஐன பெரமுனவின் முக்கியஸ்தர்களிற்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் காதர்மஸ்தான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகரட்ணம், சுமதிபால மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, கருத்து தெரிவித்த காதர் மஸ்தான், கிராமத்துடனான கலந்துரையாடல் மூலம் அந்தப்பகுதியின் தேவைப்பாடுகளை மக்களுடாக அறிந்து அவற்றை நிறைவேற்றுவதற்கான அறிவுரைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 3 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்ற வட்டார உறுப்பினர்களுக்கு 4 மில்லியனும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களுக்கு 20 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான அபிவிருத்திகளை சரியான முறையில் வழங்குவதற்கான ஆலோசனைகள் அனைத்தும் இன்று வழங்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும், கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது ஜாதிக நிதஸ் பெரமுன கட்சியின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.ஜே தர்மகீர்த்தி மற்றும் மகஜன எக்சத் பெரமுன கட்சியின் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை உறுப்பினர் சம்பத் பியதுங்க ஆகியோர் கூட்டம் இடம்பெறும் இடத்திற்குச் சென்று தமக்கு கூட்டம் இடம்பெறுவது தொடர்பில் அறிவிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் வெளியேறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


