
ஆசிரியர்கள் ,மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு வருகை தரவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் ,கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் சீர் குலையும் அபாயம் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன்திலீசன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி எல்லோரையும் நெருக்குகின்றது .முக்கியமாக வெளி மாவட்டத்தில் இருந்து வரும் ஆசிரியர்கள் ,மாணவர்களும் இதில் பங்கு கொள்கின்றனர் .மாணவர்கள் ஒரு நேர உணவுடனேயே பாடசாலை வருகின்றனர் .பாடசாலை உணவை நம்பி பாடசாலைக்கு வருகின்றவர்களும் ஏராளமாக இருக்கின்றனர்.ஆனால் தற்போதைய நிலையில் அந்த ஒரு வேளை உணவுக்கு வழி இல்லாதவர்களும் இருக்கின்றனர்.
அரசாங்கம் ஆரம்பப் பாடசாலைக்கு வழங்கிய மதியநேர உணவுக்கான நிதியை கடந்த 5 மாதங்களுக்கு மேலாக வழங்காத நிலையில் அந்த நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிபர்கள் கடைகளில் கடன்களைப் பெற்றிருந்தபோதும் இதுவரை அந்த நிதி வழங்கப்படவில்லை.
அமைச்சு உத்தியோகபூர்வமாக மதிய நேர உணவை நிறுத்துமாறு அறிவிக்காத நிலையில் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐந்து ஆறு மாதங்களுக்கு மேலாக கடைகளிலே கடன்களைப் பெற்று உணவுகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதனால் அதிபர்கள் பல லட்சங்களை கடனாக பெற்று தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மன அழுத்தங்களுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உட்படுகின்றனர். பாடசாலையில் வழங்குகின்ற உணவை நம்பி வருகின்ற மாணவர்கள் ஏராளமாக உள்ளனர். கிராமப்புறங்களில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்ற சூழலில் உணவைப் பெறக்கூட வழியில்லாத நிலையில் மிகவும் சிரமப் பட்டுக் கொண்டிருக்கின்ற வறிய மாணவர்கள், துரதிர்ஷ்டவசமாக தங்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்காக உழைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எரிபொருட்களை வரிசைகளில் நின்று பெறவேண்டிய நிலை காணப்படுகிறது. வரிசைகளில் நின்றாலும் எரிபொருள் கிடைக்குமா என்பது சந்தேகமே. வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் ஆசிரியர்கள் மூன்றில் இரண்டு பங்கை எரிபொருளுக்கும் உணவுத்தேவைக்கும் செலவிடுகின்றனர்.
தற்போதைய நெருக்கடியிலும் பாடசாலைக்கு விரல் அடையாள நடைமுறையை பின்பற்றிவருகின்றனர். இதனால் ஆசிரியர்களின் விடுமுறைகள் இழக்கப்படுகிறது. அரசாங்கம் விடுகின்ற தவறுகளுக்கு ஆசிரியர்களும் அதிபர்களும் பலிக்கடாவாக்கப்படுகின்றனர். அரசாங்கம் எரிபொருள் விடயத்துக்கு சரியான தீர்வை வழங்காமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விடயத்துக்கு சரியான தீர்வை வழங்காமல் ஆசிரியர்கள் நேரத்துக்கு வரவேண்டும் எனக்கோருவதை ஏற்கமுடியாது என்றார்.
பிறசெய்திகள்





