வவுனியா பிரதேச செயலகம் தடுப்பூசி அட்டையுள்ளவர்களே பிரதேச செயலகத்திற்குள் நுழைய முடியும் என சர்வாதிகார போக்குடன் எடுத்த முடிவால் மக்கள் அசெளகரியத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தடுப்பூசி அட்டை பரிசோதனை முறை நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் சுகாதார அமைச்சு குறித்த செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த இதுவரை தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
இவ்வாறான நிலையில் எந்த அரச திணைக்களத்திலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத செயற்பாடான கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனையை வவுனியா பிரதேச செயலகம் செயற்படுத்துவதற்கு முனைந்துள்ளமை அரசாங்கத்தின் கொள்கையில் பாரிய தாக்கத்தை செலுத்தும் என பலரும் கருதுகின்றனர்.
தன்னிச்சையாக சர்வாதிகார போக்குடன் இத்திட்டத்தை திடீரென முன்னெடுத்துள்ளமையால் நாடு முடக்கத்தினால் தமது பணிகளை செயற்படுத்த முடியாதிருந்த பொது மக்கள் தற்போதும் தமது தேவைகளை பிரதேச செயலகத்தில் முன்னெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை திடீரென குறித்த செயற்பாட்டை தாம் முன்னெடுக்கவுள்ளோம் என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளமையால் இன்றைய தினம் தடுப்பூசி போட்டும் அதற்கான அட்டைகளை கொண்டு வராதவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.