பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த வைத்தியர்!

மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்காக சென்ற திருமணம் முடிக்காத இளம் பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்த குற்றத்திற்காக மருத்துவர் ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன் சம்பந்தப்பட்ட மருத்துவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சிகிச்சைக்காக வந்த பெண்ணை தனது அறைக்குள் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை, ஆறாவது மாடியில் ஜன்னல் ஒன்றின் ஊடாக கீழே தள்ளி கொலை செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளியான மருத்துவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மரண தண்டனையும் 15 ஆண்டு கடூழிய சிறைத் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் என்பன நியாயமான மற்றும் சட்டத்திற்கு அமைய நீதியான தீர்ப்பு என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி நீர்கொழும்பு ஆதர வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவில் சேவையாற்றிய மருத்துவர், யுவதியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கொலை செய்தமை தொடர்பில் நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

குற்றவாளியான மருத்துவர், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை உட்படுத்தி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சம்பத் அபேகோன், பீ.குமாரரத்னம் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது.

குறித்த யுவதி கொலை செய்யப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் குற்றவாளியின் அறையில் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரியவந்தது.

அத்துடன் யுவதியின் மரணம் சம்பவிக்கும் நேரத்தில் அவர் உள்ளாடையுடன் இருந்தார் எனவும் அவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை நிரூபிக்கும் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனடிப்படையில், நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *