தோட்ட முகாமையாளரை தாக்கியதற்கு தோட்ட நிர்வாகத்தின் அராஜகமே காரணம்..!

தலவாக்கலை பெரிய கட்டுக்கலை தோட்டத்தில், தோட்ட முகாமையாளரை தொழிலாளர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் தோட்ட நிர்வாகத்தின் அராஜகமும் அடக்கு முறையுமே பிரதான காரணமாக அமைந்துள்ளது என்று, மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஆர்.இராஜாராம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மலையகத்தில் அநேகமான பெருந்தோட்டங்களில் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சம்பள உயர்வின் பின்பே இவ்வாறான சம்பவங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன.

பெருந்தோட்ட நிர்வாகமும் தோட்ட அதிகாரிகளும் தமிழர்களை கொச்சைப்படுத்துவதைப்போல பேசுவதும் அவர்களை ஏளனப்படுத்துவதும் இன ரீதியிலான கருத்துக்களை வெளியிடுவதும் என பல தவறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.

எனவே இவ்வாறான செயல்களை பார்த்துக்கொண்டு கைகட்டி வாய் மூடி மௌனிகளாக இருப்பதற்கு தோட்ட தொழிலாளர்கள் யாரும் இல்லாத அநாதைகளோ பயந்தவர்களோ அல்லர் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்களுக்கு புரிகின்ற பாசையில் பேச வேண்டிய நிலைமை ஏற்படும். நாங்கள் இந்த நாட்டுக்காக இன்றும் உழைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சமூகம்.

மேலும் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையே கேட்கின்றோம். தோட்ட நிர்வாகமும் தோட்ட அதிகாரிகளும் சொல்வதை கேட்டுக் கொண்டிருக்க நாங்கள் ஒன்றும் விளங்காத முட்டாள்கள் அல்ல.

எனினும் தொடர்ந்தும் மலையகத்தில் இந்த நிலைமை தொடருமாக இருந்தால், தோட்ட நிர்வாத்திற்கும் தோட்ட அதிகாரிகளுக்கும் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டிய நிலைமை ஏற்படும்.

எனவே எங்களுடைய தொழிலாளர்கள் மீது அடக்கு முறையை கட்டவிழ்த்து விடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ளவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply