விளையாட்டில் குளறுபடிகள் இடம்பெற்றால் தாரளமாக முறையிடலாம்! – அமைச்சர் நாமல்

விளையாட்டில் குளறுபடிகள் இடம்பெற்றால் தாரளமாக அதை முறையிடலாம். அதற்கான தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சபையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டில் தற்போது விளையாட்டு நிர்ணய சூது நடைபெறுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிரிப் ரகுமான் சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட்டு நிர்ணய சூது இடம்பெற்றது என அன்று விசாரணைகள் நடைபெற்றது. அதன் பின்னர் அதன் முடிவு வெளியிடப்படவில்லை.

விளையாட்டில் இவ்வாறு குழப்பங்கள் இடம்பெற்று அதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் எமது நாட்டின் விளையாட்டுத்துறை இல்லாமல் போய்விடும்.

ஆகவே, இதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன என முஜிரிப் ரகுமான் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, விளையாட்டில் குளறுபடிகள் இடம்பெற்றால் தாரளமாக அதை முறையிடலாம். அதற்கான தீர்வை நாம் பெற்றுக்கொடுப்போம் என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பதில் வழங்கினார்.

மேலும், விளையாட்டு சங்கங்களில் கறுப்பு பணம் புரள்கிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த கருத்தில் உண்மை இல்லை. சங்கங்கள் நிதி பற்றாக்குறையில் உள்ளன. அதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் எடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விளையாட்டு நிர்ணய சூது தொடர்பான விசாரணையில் எனக்கு திருப்தி இல்லை. விளையாட்டு வீரர்கள் அன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

ஆனால், அதிகாரிகள் யாரும் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே, இந்த நிலைமை இப்போதும் தொடரும் என அமைச்சர் மகிந்தானந்த அழுத்தகமே சபையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply