அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் தனிப்பெருங்கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும்- முதலமைச்சர்

அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாளான ஒக்டோபர் 5ஆம்  நாள் ‘தனிப்பெருங்கருணை நாளாக’ கடைப்பிடிக்கப்படுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம்தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவிலுள்ள மருதூரில் 05.10.1823இல் பிறந்தார்.

அவர் கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்தார். மேலும், அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதைக் குறிக்கும் வண்ணம்  சமரச சுத்த சன்மார்க்கத்தை நிறுவினார்.

வடலூரில் சத்தியஞான சபையை எழுப்பினார். மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

அதாவது, பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது.

ஆகவே, அவர் பிறந்த நாளான ஒக்டோபர்  5ஆம் நாள், இனி  ஒவ்வொரு  வருடமும் ‘தனிப்பெருங்கருணை நாள்’ எனக் கடைப்பிடிக்கப்படும்” என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply