மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பிரதேச சபையின் வருமான வரி மேற்பார்வையாளர் ஒருவரை கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர் இன்று பிரதேச சபையில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வீடு கட்டுவதற்கான அனுமதி பத்திரம் வழங்குவதற்காக அவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பிரதேச சபையில் கடமையாற்றிவரும் வருமான வரி மேற்பார்வையாளர் கோரியதையடுத்து இது தொடர்பாக குறித்த நபர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆலோசனையின் பிரகாரம், குறித்த நபர் இன்று பிரதேச சபையில் வைத்து வருமான வரி மேற்பார்வையாளருக்கு இலஞ்சமாக 25 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.
அங்கிருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினர், கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வருமான வரி மேற்பார்வையாளர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர் எனவும், இவரை கொழும்புக்கு அழைத்து சென்று விசாரணையின் பின்னர் கொழும்பு; நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


