
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டின் தெற்கே ஹர்னாயிலிருந்து வடகிழக்கே 14 கி.மீ. தொலைவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அத்தோடு, மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், இந்த நிலநடுக்கத்தில் சிக்கி ஒரு பெண், ஆறு குழந்தைகள் உட்பட20 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 200 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பேரிடர் மேலாண்மை ஆணைய இயக்குனர் ஜெனரல் நசீர் கூறியுள்ளார்.

