பயணத்தடையை மீறி பயணித்த தனியார் பேருந்துகள் இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு!

பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக  சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பேருந்து வண்டிகள் இரண்டு   இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன.

அம்பாறை – அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை கல்முனை  ஊடாக  கொழும்பு நோக்கி  சட்டவிரோதமாக இரண்டு பேருந்துகள் சென்று கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரியநீலாவணை இராணுவ காவலரனில் வைத்து நேற்று(புதன்கிழமை) இரவு 10 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டன.

இதன்போது குறித்த இருவேறு பேருந்துகளிலும் சுமார் 100க்கும் அதிகமான பயணிகள் இருந்ததுடன் அவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி  மேஜர் சாந்த விஜயகோன்  சுகாதார தரப்பு அதிகாரிகளினால் பயணிகள் அனைவரும் அறிவுறுத்தபட்டு  மீண்டும்  குறித்த பேருந்துகளில் அழைத்து செல்லப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் சிறுது நேரம் தடுத்து வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர்  திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பேருந்துகளின் சாரதி நடத்துனர்களிடம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மாகாணத்தில் உள்வரும், வெளியேறும் பல  நுழை வாயில்களில்  கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவதாகவும் அவ்வாறு  கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்பவர்கள் அனைவரும்  திருப்பி அனுப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு  அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடர்ந்தும் அமுலிலுள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி அம்பாறை மாவட்டத்தில் இருந்து இரவு வேளைகளில்   குளிருட்டப்பட்ட பல தனியார் பேருந்துகள் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply