சட்ட விரோத மீன்பிடி முறையை உடனடியாக தடுத்து நிறுத்தி, பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்க இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் கடல் பகுதியில் திட்டமிட்ட வகையில் முல்லைத்தீவு, கொக்குளாய் மற்றும் புல் மோட்டைப் பகுதியில் தடை செய்யப்பட்ட சுருக்குவலை மீன்பிடியில் தென்னிலங்கை மீனவர்கள் தீவிரமாக ஈடுபடுகின்றனர்.
இதனால், அப் பகுதியில் வாழ்வாதார தொழிலாளாக, பாரம்பரிய சிறு தொழிலில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அவர்களது நாளாந்த வாழ்வாதார வருமானங்கள் பாதிக்கப்படுகின்றன.
ஆகையால், கடற்றொழில் நீரியல்வளத்துறை உடனடியாக சட்ட விரோத மீன்பிடி முறையை தடுத்து நிறுத்தி பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.
வடக்கில், மன்னார், யாழ்ப்பாணம், வடமராச்சி கிழக்கு, பூநகரி, நெடுந்தீவு, போன்ற கடற்பகுதிகளில் தொடர்ச்சியாக தமிழக மீனவர்களில் ஒரு பகுதியினர் சட்டவிரோத இழுவலை ரோலர்களைப் பயன்படுத்தி வடபகுதி கடல் வளங்கள் யாவற்றையும் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, அண்மையில் யாழ் குருநகர் மீனவர்களுடன் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். முடிவில்லாமல் தொடரும் அவல நிலைக்கு சம்பந்தப்பட்ட இரு நாட்டு அதிகார சக்திகளும் தலையிட்டு தீர்வு வழங்க வேண்டும்.
இலங்கையின் வடபகுதி மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவை சந்தித்து தங்களது வாழ்வாதாரத்தை நோக்கி செய்யும் மீனவத் தொழிலில் அவர்களது பாதுகாப்பையும் தொழிற் பாதுகாப்பையும் உறுதி செய்வது எல்லோரதும் கடமை. ஒற்றுமையாக குரல் கொடுத்து மீனவர்களின் வாழ்வுரிமையை உறுதி செய்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


