லொஹான் ரத்வத்த மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.

நேற்று முன்தினம் விசாரணை ஒன்றுக்காக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த நிலையில், தான் வழங்கிய வாக்குமூலத்தை மீண்டும் வாசித்துவிட்டு கையொப்பம் இடுவதற்காக இன்று மீண்டும் ஆணைக்குழுவுக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் வேறு விடயங்கள் தொடர்பில் கூறமுடியாது. சுயாதீன விசாரணைகளுக்காகவே நான் இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகினேன். அந்த விசாரணைகள் முடிந்தமையின் பின்னர் நான் பதிலளிக்கின்றேன் என தெரிவித்தார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சுப் பதவியலிருந்து லொஹான் ரத்வத்த விலகினார்.

இந்நிலையில், கைதிகளின் உரிமை மீறப்பட்டிருப்பதாக கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அண்மையில் அனுராதபுரம் சிறைக்கு விஜயம் செய்து கைதிகளிடம் வாக்குமூலத்தைப் பதிவுசெய்திருந்தார்கள்.

இதனையடுத்து, விசாரணைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

விசாரணைக்கான அழைப்புக்காக லொஹான் ரத்வத்த மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply