சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மகளிர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி முன்பள்ளி, ஆரம்ப கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச்சேவைகள் இராஜாங்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் சிறுவர் தின பிரதான நிகழ்வு நேற்று (7) மாவட்ட செயலகத்தில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி,ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள், கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த டி சில்வா தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் சிறுவர்கள் மற்றும் மகளிரின் அபிவிருத்தி கருதி பல்வேறு வகையான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
தற்போது மாவட்ட மட்ட பிரதேச அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் கிரமமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது.
சிறுவர் துஷ்பிரயோகம் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அவற்றை முற்றாக ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே இந்த விடயத்தில் அனைவரும் பொறுப்புடன் செயற்படல் வேண்டும். அது மாத்திரமல்ல மகளிர் நலன் கருதி பல்வேறு வகையான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவற்றின் மூலமாக சிறுவர் மற்றும் மகளிரின் உரிமைகளை பாதுகாத்து அவர்கள் சிறப்பான முறையில் சமூகத்தில் வாழ வழி செய்வதோடு நாட்டினுடைய நலனுக்கு பங்களிப்புச் செய்யக்கூடியவர்களாக மாற்றியமைப்பது இதன் பிரதான நோக்கமாக அமைவதாக அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்கள், முன்பள்ளி பாடசாலைகளுக்காற உதவிகள், விதவைப் பெண்களுக்கான இலகு கடன் உதவிகள், சுய தொழில் உதவி உபகரணங்கள், பாடசாலைகளுக்கான சுய கிருமித்தொற்று நீக்கி இயந்திரம், தையல் இயந்திரங்கள் உட்பட பல உதவிகள் இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் உயரஸ்தானிகர் தன்வீர் அஹமத், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கபில அத்துகோரல, இராஜாங்க அமைச்சின் செயலாளர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, அமைச்சின் உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,சக உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.




